பத்மநாபபுரம் அரண்மனை - நாகர்கோயில்
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், நாகர்கோயிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் அமைந்துள்ள அரண்மனை. சுற்றிலும் கிரானைட் கற்களால் ஆன கோட்டை உள்ளது. 1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சிசெய்த இரவிவர்ம குலசேகரப் பெருமாள் என்ற மன்னனால் கட்டப்பட்டது. கேரளக் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த சான்று இந்த அரண்மனை. 86 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த அரண்மனை, காலப்போக்கில் 6 ஏக்கராகக் குறுகிவிட்டது.
மேலே கண்டது அன்னதான சாலை. திருவிதாங்கூர் மன்னர்கள் அன்னதானத்தை மதித்துப் பின்பற்றியவர்கள். ஒருநாளில் கிட்டத்தட்ட 8,000 பேர் உணவருந்தியது இங்குதான்.
This Way என்று அங்கங்கே வழிகாட்டிகள். மலையாளப் பெண்களும், ஆண்களும் ஆங்கிலத்தில் அரண்மனை குறித்து விளக்கமளிக்கிறார்கள். அரண்மனையை அவர்கள் பராமரிக்கும் பாங்கு பெருமையாகவும், பொறாமையாகவும் இருந்தது.
உப்பரிகை மாளிகையில் எடுக்கப்பட்ட படங்கள். 1744 ல் அரசாண்ட மார்த்தாண்டவர்மனால் நிர்மாணிக்கப்பட்டது. மாளிகையின் சுவர் தரமானது. கீழ்ப்பகுதி கருவூலமாகவும், அடுத்தது அரசனின் படுக்கையறையாகவும், மூன்றாவது பகுதி அரசனின் தியானப் பகுதியாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நான்காவது பகுதியில் சைவ, வைணவக் கதைகளை விளக்கும் சித்திரங்கள் உள்ளன.
இதற்கடுத்த பகுதி ஆயுதசாலை. ஜன்னல்கள் ஏதுமில்லாத, இரண்டு வாசல்கள் கொண்ட அறை. நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் காவல்கோபுரம் உள்ளது. சேமிக்கப்பட்டவற்றில் பெரும்பாலான ஆயுதங்கள் ஆங்கிலேயரால் களவாடப்பட்டன. மிச்சமுள்ளவை அரண்மனையிலுள்ள அருங்காட்சியகத்தில்!
இதற்குப் பிறகு நாம் காணவிருப்பது அம்பாரிமுகப்பு. திருவிழாக் காலங்களில் யானைகளின் மேல் காணப்படும் அம்பாரிகளுக்கு இணையாகச் சொல்கிறார்கள். (உள்ளூர் மக்களிடம் மேல்விவரங்கள் கேட்டுக் கொள்ளவும்).
அடுத்த பகுதி இந்திரவிலாசம். வெளிநாட்டு விருந்தினர்களுக்காகக் கட்டப்பட்ட Guest House! கட்டிடப் பாணியில் வெளிநாட்டுச் சாயல் தெரிகிறது.
நவராத்திரி மண்டபம், அருங்காட்சியகம் குறித்த இடுகை விரைவில்! Download As PDF