ஆதி கும்பேஸ்வரர் - கும்பகோணம்
குடந்தை நகரின் நடுநிலையாக விளங்கும் இக்கோயில், தஞ்சையிலிருந்து 38 கி.மீ தொலைவில் வடகிழக்கிலும், மயிலாடுதுறையிலிருந்து 35 கி.மீ தொலைவில் மேற்கிலும் அமைந்துள்ளது. இத்தலம், குடமூக்கு எனவும் அழைக்கப்படுகிறது.
தலப்பெயர் விளக்கம்:
பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுத குடத்தை சிவபெருமான் அம்பு எய்து குடத்தின் மூக்கை உடைத்ததால் குடமூக்கு என்னும் பெயர் உரித்தாயிற்று. கி.பி 7 ஆம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசு நாயனாரும் இத்தலத்தை “ குடமூக்கு” எனவும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார் ஆகியோர் குடந்தை எனவும், பூதத்தாழ்வார் குடமூக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.
“ மலைதளி வந்து கும்பகோண நகர்வந்த பெருமாளே “ என அருணகிரிநாதர் இத்தலத்தைப் பாடுகிறார். குடமூக்கு என்ற சொற்றொடர் இடைக்காலத்தில் கும்பகோணம் என மாறியது. குடம் என்பதற்கு கும்பம் என்ற பொருளும் உண்டு. கும்பம் உடைந்த பகுதி கோணலானதால், கும்பகோணம் ஆயிற்று. தஞ்சாவூர் தஞ்சை என அழைக்கப்படுதல் போன்று கும்பகோணம் குடந்தை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.
தலச்சிறப்பு:
தலச்சிறப்பு, மூர்த்திச் சிறப்பு, தீர்த்தச் சிறப்பு ஆகிய மூன்று சிறப்பினாலும் பொருந்தி விளங்குவதே மேலான தலம். இத்தலம், கும்பேசர் தன் கையால் சிருஷ்டித்தது.உலகின் புண்ணிய தீர்த்தங்கள் யாவும் ஒருசேர வந்து நீராடுவதால், தீர்த்தம் சிறப்புடையது. இத்தலம், பஞ்சகுரோசத்தலங்களில் ஐந்துடையது. (திருவிடைமருதூர், திருநாகேசுவரம், திருத்தாரேச்சுரம், திருவேரகம், திருப்பாடலவனம்) ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி. இரண்டரை நாழிகை என்பது ஒரு மணி நேர நடைப்பயண தூரம்.
பிராட்டி மங்களநாயகி (வளர்மங்கை) இமயமலையை விட்டு குடந்தைத் தலத்திற்கு வந்தபோது அமுதத்தால் நனைந்த பஞ்சகுரோசத்தலங்களுக்கும் சென்று தங்கி, குடந்தை கும்பேசர் சன்னிதி அடைந்து இறைவனின் அருள்பெற்று மந்திரபீடேசுவரியாக உறைந்தவள்.
கோயிலின் அமைப்பு:
இத்திருக்கோயில் முறையே இராசகோபுரம், கைலாசகோபுரம், கட்டகோபுரம், மூலவர்கோபுரம் என்ற நிலையில் நான்கு கோபுரங்களைக் கொண்டு விளங்குகிறது. இராசகோபுரம் 128 அடி. இராசகோபுரத்தின் வடமேற்கு திசையில் கோபுரத்தை ஒட்டி மங்களகூபம் உள்ளது. இதையடுத்து யானைக் கூடமும், திருக்கல்யாண மண்டபமும் அமைந்துள்ளன. கோபுரத்தின் தென்புறத்தில் நந்தவனம் உள்ளது.
பாடல்கள்:
திருஞானசம்பந்தர் , மூன்றாம் திருமுறையில்,
ஒத்தர வங்களோடு மொலிகாவிரி யாற்றயலே
பூத்தர வங்களோடும் புகைகொண்டடி போற்றிநல்ல
கூத்தர வங்களோவரக் குழகன்குட மூக்கிடமா
ஏத்தர வங்கள் செய்ய இருந்தானவ னெம்மிறையே.
என்று பாடுகிறார். கிட்டத்தட்ட அனைத்து சைவப்பெரியவர்களாலும் பாடல் பெற்ற தலம். அனைவரும் காண வேண்டிய இடம்.
சோமேஸ்வரர் ஆலயம் - கும்பகோணம்
கும்பேஸ்வரர் கோயிலுக்கு முன்னால் அமைந்துள்ள ஆலயம். மற்ற ஆலயங்களை ஒப்பிட்டால், சிறியது. ஆனால், தமிழகத்தின், நுட்பமான கட்டிடக்கலையின் வளங்களைக் கொண்டது. சோழ மன்னன் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
திருநாவுக்கரசர் இத்தலத்திற்கு வந்தபோது, சமணர்கள், தங்கள் மடத்தை இக்கோயிலுக்கு முன்னால் கட்டி, ஆலயத்தை மறைத்து, விக்கிரகத்தையும் தாழி ஒன்றால் மறைத்தனர். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கிவிடுகிறார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார். மூலவர் தர்மபுரீஸ்வரர் சந்நிதியும், அம்பாள் விமலநாயகி சந்நிதியும் குறிப்பிடத்தக்கவை.
கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் அம்பாள் லோகாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்குள்ள படிக்கட்டுகளில் பிரகலாத சரித்திரச் சிற்பங்கள் செதுக்கபட்டிருகின்றன. உள் பிரகாரத்தில் நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் மூலவர் சோமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. அருகில் அர்த்த மண்டபத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை யாறை வடதளிச்
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.
என்று அப்பரால் பாடல் பெற்ற இடம். பார்க்க வேண்டிய இடம்.
இன்னும் நன்றாகப் பராமரிக்க வேண்டிய தலமும் கூட!