கங்கை கொண்ட சோழபுரம் - பகுதி - 1
முதலாம் இராசேந்திர சோழன் அலைகடல் நடுவில், மரக்கலம் பலசெலுத்திப் பெற்ற கங்கை வெற்றியினைச் சிறப்பிக்கும் வகையில் கட்டப்பட்டது இக்கோயில். சிதம்பரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் தென்மேற்காகவும், கும்பகோணத்தில் இருந்து வடக்கே 30 கி.மீ தொலைவிலும், அரியலூரிலிருந்து மேற்கே 30 கி.மீ தொலைவிலும் அணைக்கரையில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் உள்ளது.
ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முதலாம் இராசேந்திர சோழனின் தலைநகரம். கங்கை, இலங்கை, கடாரம், ஜாவா, போர்னியா, சுமத்திரா அந்தமான்- நிகோபார் எனப்பரந்து விரிந்த சோழப்பேரரசின் இதயம், இப்பகுதி. முதலாம் இராசேந்திர சோழனுக்குப் பிறகு, குலோத்துங்கன், விக்கிரமசோழன், இராசாதிராசன் ஆகிய மன்னர்களின் தலைநகரம்.
தஞ்சைப் பெரியகோயிலை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சைக் கோயிலைவிட சற்று உயரம் குறைந்தது. ஆயினும், கட்டடக் கலை நுணுக்கத்தில் மிகச் சிறந்தது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய விமானத்திற்குப் பிறகு, கங்கை கொண்ட சோழீச்சுவரர் விமானமே தமிழ்நாட்டில் உள்ள விமானங்களில் உயர்ந்து நிற்பதாகும்.
மாபெரும் கலைப்படைப்பை நமக்குத் தந்த மாமன்னன் குறித்த தகவல்களை இப்பதிவில் நன்றியோடு தெரிவிக்கிறேன். ஆலயம் குறித்த இதரத் தகவல்கள் மற்றும் படங்கள் அடுத்த பதிவில்.
முதலாம் இராசேந்திர சோழன்.
இயற்பெயர் மதுராந்தகன். சோழப்பேரரசன் இராசராச சோழனுக்கும், திரிபுவன மாதேவி என வழங்கும் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 - 1044. ஆட்சி புரிந்த 32 ஆண்டுகளில் பெற்ற வெற்றிகள் எண்ணற்றவை. கி.பி. 1024 முதல் கி.பி. 1025 வரை கடல்கடந்து பர்மா, கடாரம் ஆகிய நாடுகளை வென்றான். " கடாரம்கொண்டான்" என்ற விருதுப் பெயரும் பெற்றான்.
இந்தியாவின் வடக்கே கங்கை நதிவரை இராசேந்திரன் வெற்றிக்கொடி பறந்தது. புலவர்கள் " கங்கை நதியும் கடாரமும் கைக்கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோன் " என்று சிறப்பித்துப் பாடினர். மன்னனது வடநாட்டு வெற்றிக்கு வாளாகவும், கேடயமாகவும் விளங்கிய நம் வீரர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு நகரையே நிர்மாணித்து, மாபெரும் கங்கை கொண்ட சோழீச்சுரம் கோயிலைத் தோற்றுவித்து அழியாப் புகழ் கொண்டான். இராசேந்திர சோழன் மட்டுமல்லாது, அவனது மனைவியரும் இக்கோயிலுக்கு செப்புத் திருமேனிகளும், நிவந்தங்களும் அளித்துள்ளனர்.
கி.பி 1023 ல் வடநாட்டில் போர் தொடுத்து மண்ணைக்கடக்கம், கோசலநாடு, உத்தரலாடம், தக்கணலாடம், வங்காளம் முதலிய நாடுகளை வென்று, அந்நாட்டு அரசர்களின் தலைமீது கங்கை நீரைக் கொண்டு வரும்படிச் செய்தான். கங்கை நீர் தெளித்து நிர்மாணிக்கப்பட்ட கோயிலும், சுற்றுப்புறங்களும், மன்னனின் வெற்றியை இன்றும் பறைசாற்றுகின்றன.பாரிஜாத மலரில் ரீங்காரமிடும் தேனீயைப் போல சிவனுடைய தாமரைப் பாதத்தை நேசிப்பவனாக மதுராந்தகன் (இராசேந்திரன்) விளங்கினான் என்ற செய்தியை ஏசாலம் செப்பேடு கூறுகிறது. இது, செப்பேட்டின் வடமொழிப் பகுதியில் உள்ள செய்தியாகும்.
இதரப் பெயர்கள்: அதிசய சோழன், இரட்டபாடி கொண்ட சோழன், சோழேந்திர சிம்மன், பராக்கிரம சோழன், தான விநோதன், நிருபதிவாகரன், மனுகுலச்சோழன், மகிபாலக் குலகாலன், பண்டிதசோழன்.
இம்மன்னன் காலத்து குருமார்களாக சர்வசிவ பண்டிதர், ஈசானசிவ பண்டிதர், இலகுளீச பண்டிதர், நம்பியாண்டார் நம்பி, கருவூலத் தேவர், சதுரானன பண்டிதர் ஆகியோர் விளங்கினர். தனது குருவான சதுரானன பண்டிதர் விருப்பத்தின் பேரில் திருவொற்றியூர் கோயில் விமானத்தை, வீரசோழதச்சன் என்ற சிற்பியைக் கொண்டு அமைத்ததைக் கல்வெட்டு கூறுகிறது.
இமயத்தில், புலிச்சின்னம் பொறித்திட்ட மாமன்னன் கரிகாலச் சோழன் பரம்பரையில் வந்த இராசேந்திரன், எண்ணற்ற வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மன்னன் விரும்பியது கங்கை வெற்றியைத்தான். எனவே, " பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட அய்யன்" என சிறப்பிக்கப் பெற்றான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட இக்கோயில், கல் காவியமாக, சிற்பக் களஞ்சியமாக, செப்புக்கலையின் கூடமாக, ஆன்மீக அமைதியின் இருப்பிடமாக, மாமன்னன் இராசேந்திரனின் போர்த்திறனையும், பேராற்றலையும் உலகோர்க்கு அறிவிக்கும் நிலைக்களனாகச் சோழ மண்ணில் திகழ்கிறது.
கங்கை கொண்ட சோழபுரம் - பகுதி - 2
இக்கோயில் கருவறை , அர்த்தமண்டபம், இடைநாழி, மணிமண்டபம், மகா மண்டபம், முக மண்டபம், நந்தி மேடை, சிங்கமுகக் கிணறு, அம்மன் சந்நிதி, திருச்சுற்று மதில் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. விமானத்தின் வடக்கிலும், தெற்கிலும் சண்டிகேஸ்வரர் ஆலயம் உட்பட ஐந்து சிறு ஆலயங்கள் உள்ளன.
விமானத்திற்குச் சற்று விலகி வடக்கிலும், தெற்கிலும் சமதூரங்களில் வடகைலாயம் , தென்கைலாயம் என்ற சிறு கோயில்களும், வடகைலாயத்தின் முன்னர் அம்மன் கோயிலும், தென் கைலாயத்தின் பின்னர் கணபதி கோயிலும் இப்பெரும் கோயிலின் அங்கங்களாகத் திகழ்கின்றன.
விமானத்திற்குச் சற்று விலகி வடக்கிலும், தெற்கிலும் சமதூரங்களில் வடகைலாயம் , தென்கைலாயம் என்ற சிறு கோயில்களும், வடகைலாயத்தின் முன்னர் அம்மன் கோயிலும், தென் கைலாயத்தின் பின்னர் கணபதி கோயிலும் இப்பெரும் கோயிலின் அங்கங்களாகத் திகழ்கின்றன.
விமானத்தின் அதிட்டானம், பல சிற்ப விசித்திரங்களையும், வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. மூலக் கரு அறை 35 அடி உயரம் கொண்டது. இதன் புறசசுவர்களில் உள்ள தேவகோட்டங்களில் பல அரிய சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. உட்பிரகாரம் 10 அடி அகலம் கொண்டது. விமானத்தின் மொத்த உயரம் 180 அடியாகும்.
கல்வெட்டு கூறும் செய்திகள்:இங்கு கிடைத்துள்ள கல்வெட்டுக்களில் பழைமையானது பராந்தக சோழனது ஆகும். இது, இவ்வூர், 10ஆம் நூற்றாண்டிலிருந்து உள்ளதற்குச் சான்று. இராசேந்திரனின் மூன்றாம் மகன் வீரராசேந்திரனது கல்வெட்டு சுமார் 216 வரிகள் கொண்டது. இராசேந்திர சோழன் தனது 23 ஆம் வயதில் கொடுத்த தானங்களையும், இராசாதிராசன் தனது 26, 30 ஆம் ஆண்டுகளில் கொடுத்த தானங்களையும் குறிக்கிறது.
சோழ மண்டலத்து பல நாட்டுப் பிரிவுகளையும், அவற்றில் இருந்த ஊர்களையும், அந்த ஊர்கள் இக்கோயிலுக்கு அளிக்க வேண்டிய நெல்லையும் குறிக்கிறது. அரசாங்க அதிகாரிகளாக யார் யார் பணிபுரிந்தார்கள்; அவர்களது பணிகள் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
இங்கு வருபவர்கள், தயவுசெய்து ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்க உதவுங்கள். நான் பார்த்தவை , என்னை எழுதத் தூண்டியது. புகைப்படங்களில் நீங்களே காணலாம். கலாச்சாரச் சின்னங்களை மாசுபடுத்துவோர்க்கு, அதிகபட்ச தண்டனை வழங்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும்.