திருவண்ணாமலை - பகுதி - 1
நினைத்தாலே முக்தி தரும் தலமாகக் கருதப்படுவது திருவண்ணாமலை. இங்குள்ள அண்ணாமலையார் திருக்கோயிலின் பரப்பளவு 24 ஏக்கர். மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில், ஆறு பிரகாரங்களையும், ஒன்பது கோபுரங்களையும் கொண்டுள்ளது. கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் உடையது. 11 நிலைகளுடன் அமைந்துள்ளது.
மேற்குக் கோபுரம் பேய்க் கோபுரம் என்றும், தெற்குக் கோபுரம் திருமஞ்சனக் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. வடக்குக் கோபுரம் அம்மணி அம்மாள் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. அம்மணி என்னும் ஏழைப்பெண் பொருள் ஈட்டிக் கட்டிய கோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு நோக்கி நிற்கும் இராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன், வலப்பக்கத்தில் ஆயிரங்கால் மண்டபத்தைப் பார்க்கலாம். இங்குதான் பாதாள லிங்கேசர் கோயில் உள்ளது. இதில் ரமணமுனிவர், பலகாலம் தங்கித் தவம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடப்பக்கம் கம்பத்து இளையனார் கோயில் உள்ளது. இங்குள்ள ஒரு கம்பத்தில்தான் அருணகிரிநாதரின் வேண்டுகோளுக்கு இணங்கி, முருகன் காட்சியளித்தார். அடுத்துள்ள சிவகங்கைத் திருக்குளத்தை ஒட்டி நடந்தால், திருக்குளத்தின் வடமேற்கே உள்ள சர்வசித்தி விநாயகரைக் காண முடியும். இதற்குப் பின் , பெரிய நந்திகேசுரர்; பின்னர் இரண்டாம் கோபுர வாயில்.
வல்லாள மகாராஜா கோபுரம். அருணகிரிநாதர் இந்தக் கோபுரத்தின் மீதேறி, உயிரை மாய்க்கத் துணிந்த போது, முருகனால் காப்பாற்றப்பட்டார். கோபுரத்தின் முன்புறம், வடதிசையில், முருகன் சந்நிதியும், தென்திசையில் கல்யாண சுந்தரேசுரர் சந்நிதியும் உள்ளன.
கோபுரம் கடந்து உள்ளே சென்றதும், வலப்புறம் , சக்தி விலாச சபா மண்டபத்தைக் காணலாம். ஞானியார் சுவாமிகளின் பெருமுயற்சியால், அன்றுதொட்டு சமயச் சொற்பொழிவுகள் நடக்கும் இடமாக இம்மண்டபம் திகழ்கிறது. கார்த்திகை விழா நாட்களில், இங்குதான் சமயச் சொற்பொழிவு தினமும் நடைபெறும். தென்புறம், காலபைரவர் சந்நிதியைக் காணலாம்.
அதற்கு முன்பாக ப்ரம்மதீர்த்தம் உள்ளது. அடுத்தது கிளிக்கோபுரம். அருணகிரிநாதர் கிளி வடிவத்துடன், பாரிசாத மலரைக் கொண்டு வந்த பிறகு, தம் உடம்பைக் காண முடியாமல் போனதால், கிளி உருவத்துடன் இருந்து கந்தர் அனுபூதி பாடினார் என்று கூறப்படுகிறது.
கிளிக்கோபுர வாயிலைக் கடந்து சென்றால், பதினாறு கால் மண்டபத்தைக் காணலாம். இங்குதான், திருக்கார்த்திகை நாளில், பஞ்சமூர்த்திகள் மலையை நோக்கி நிற்க, மலைமீது தீபம் ஏற்றப்படும்.
கோயிலின் பாதியைக் கடந்தது, கால்கள் வலிக்கிறது. அடுத்த பதிவில் மேல் விவரங்களும், புகைப்படங்களும்.
திருவண்ணாமலை - பகுதி - 2
தொடர்ந்து நடப்போம். பதினாறு கால் மண்டபத்தை அடுத்த வாயிலில், கொடிமரத்தையும், தீபஸ்தம்பத்தையும் காண முடியும். இந்தப் பிரகாரத்தை வலம் வரும்போது, முதலில் காண்பது சம்பந்த விநாயகர். அடுத்து இருக்கும் மகிழமரம், தலமரம். மகிழமரத்தை ஒட்டி நேராக நடந்தால், வருவது, திருக்கல்யாண மண்டபம்.
மேற்கே அருணகிரியோகீஸ்வரர் சந்நிதியும், வடக்கே அம்பாள் சந்நிதியும், அதனை அடுத்து காளத்திலிங்கேசுரர் சந்நிதியும் காட்சியளிக்கும். நான்காவது வாயிலைக் கடந்தவுடன், அதிகார நந்திகேசுவரரைக் காணலாம். இந்த இரண்டாம் பிரகாரத்தின் தெற்கே அறுபத்து மூவர் திருவுருவங்கள், மேற்கே சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர் சந்நிதிகளைக் காணலாம். வடக்கே திருப்பள்ளியறையும், நடராசர் சந்நிதியும் உள்ளன.
இப்போது நாம் உள்ளே நுழைவது அண்ணாமலையார் சந்நிதி; அருணாச்சலேசுவரர் லிங்க வடைவாகக் காட்சி தருகிறார்; அவரை வழிபட்ட பிறகு, முதல் பிரகாரமாகிய மேடையை வலம் வரும் போது, தெற்கே தட்சிணாமூர்த்தியும், மேற்கே லிங்கோத்பவரின் திருக்காட்சியையும், வடக்கே பிரம, துர்க்கை, சண்டேசுரர் சந்நிதிகளையும் காணலாம். அதன் பின்பு, இரண்டாம் பிரகாரத்தின் வைகுந்த வாயில் வழியே அம்பாள் சந்நிதியை அடையலாம்.
அம்பாள் சந்நிதியில் உள்ள மகாமண்டபத் தூண்களில், அஷ்டலக்ஷ்மிகள், ருத்ரதுர்க்கை முதலிய சிற்பங்கள் அழகுடன் விளங்குகின்றன. சந்நிதியின் முன்பாக, இடப்பக்கத்தில் நவக்கிரக மூர்த்திகளைக் காணலாம்.
திருவண்ணாமலை - சில குறிப்புகள்:
திருவண்ணாமலைத் திருக்கோயில், சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விசயநகரப் பேரரசர்கள், தஞ்சை நாயக்கர்கள் ஆகிய மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. மன்னர் பரம்பரையைத் தொடர்ந்து, நகரத்தார் பலரும் திருப்பணி செய்துள்ளனர். கயிலங்கிரியை விட உயர்வானதாக மகான்களால் கருதப்படுவது.
மலையின் உயரம் , 2668 அடி.
தலவிருட்சம் மகிழமரம்.
தலவிருட்சம் மகிழமரம்.
பஞ்சபூதத் தலங்களில், அக்கினியின் தலம்.
சித்தர்களின் சரணாலயம்.
அடிக்கு 1008 லிங்கம் என்பர்.
அருணகிரிநாதர் அவதரித்த இடம்.
மகாதீபம் ஏற்றுவதற்காக மலையின் உச்சியில் கொப்பரை ஒன்று வைக்கப்படும். 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புச் சட்டங்களைக் கொண்டும் இந்தக் கொப்பரை உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஐந்தரை அடி உயரம் கொண்டது. தீபத்திற்கு, 600 லிட்டர் நெய்யும், இரண்டு மூட்டை பஞ்சும், 15 மீட்டர் காடாத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப் படுகிறது.
மகாதீபம் ஏற்றுவதற்காக மலையின் உச்சியில் கொப்பரை ஒன்று வைக்கப்படும். 92 கிலோ செம்பும், 110 கிலோ இரும்புச் சட்டங்களைக் கொண்டும் இந்தக் கொப்பரை உருவாக்கப்பட்டுள்ளது. இது, ஐந்தரை அடி உயரம் கொண்டது. தீபத்திற்கு, 600 லிட்டர் நெய்யும், இரண்டு மூட்டை பஞ்சும், 15 மீட்டர் காடாத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப் படுகிறது.
இந்த உலகிற்கு நீங்களும் வெளிச்சம் கொடுங்கள் என்பதே திருவண்ணாமலை தீபத்தின் நோக்கம். மற்றவருடைய வாழ்வில் நீங்கள் தீபம் ஏற்றினால், அதுவே தீப தரிசனத்தின் பண்பும், பயனுமாகும்.