இரத்தினகிரி
கரூர் மாவட்டம் , குளித்தலை வட்டத்தில் சிவாயம் அய்யர்மலை என்னும் கிராமத்தில் ரெத்தினகிரீசுவரர் திருக்கோயில் வானோங்கி அமைந்துள்ள மலைக்கோவிலாகும். சோழ நாட்டில் அமைந்துள்ள 191 சிவத்தலங்களில் காவிரி ஆற்றுக்குத் தெற்கே 28 சிவத்தலங்களும், வடக்கே 63 சிவத்தலங்களும் உள்ளன. தென்கரையில் உள்ள பாடல் பெற்ற திருக்கோவில்களில் முதலாவதாக அமைந்துள்ள சிறப்பு இத்திருத்தலத்திற்கு உண்டு. சைவ சமய நாயன்மார் நால்வரில் திருநாவுக்கரசரால் போற்றித் திருத்தாண்டகத்தில் திருவாட்போக்கியம்மான் என்று இங்கு எழுந்தருளியுள்ள இறைவனையும் , சுரும்பா மருங்குழலி என்று இறைவியையும் ஏத்திப் பாடியுள்ளார்.
இத்திருக்கோயில் கடல் மட்டத்திற்கு 1178 அடி உயரத்தில் 1017 படிகள் கொண்ட மலையில் அமைந்துள்ளது. மக்களால் பொதுவாக இத்தலத்திற்கு வழங்கப்படும் பெயர் அய்யர்மலை என்பதே. இம்மலைக்கு சிவாயமலை, ரத்தினகிரி, ரத்தினாசலம், மணிகிரி, வாட்போக்கி என்ற பெயர்களும் உண்டு. மலையேறிச் செல்லும்படி வழியும் , மலை மேற்கோயிலில் உள்ள பிரகாரங்களும், ஓம் என்ற பிரணவ எழுத்து போலவும் சிவ மகா மந்திரமான ஐந்தெழுத்தின் வடிவமாகவும் அமைந்திருத்தலால் சிவாயமலை என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
கோயில் அமைப்பு:
இயற்கை வனப்புடன் இலங்கும் இரத்தினகிரி என்ற இம்மலை, ஊரின் மையத்தில் அமைந்துள்ளது. திருவிழாக் காலங்களில் பஞ்சமூர்த்திகளும் வீதிவலம் வருவர். திருத்தேரும், இவ்வழியே சுற்றிவருகிறது. கீழிருந்து மேலே போகும் படி வழியில் , ஆங்காங்கே 21 மண்டபங்கள் இருக்கின்றன. இது, கோயிலில் இலட்சம் விளக்குகள் ஏற்றியதன் நினைவாகக் கட்டப்பெற்றது. இன்னும் பல்வேறு மண்டபங்கள் உள. சென்று காணவும்!
சிற்பங்கள்:
பெரும்பான்மையான சிற்பங்கள் , சோழர் காலத்தைப் பிரதிபலிக்கின்றன. பிரகாரம் , பிரணவ எழுத்துப் போல் அமைந்துள்ளது. சுவாமி சன்னதிக்கெதிரில் நந்திக்கருகில் இரண்டு பித்தளையிலான விளக்கு நாச்சியார் உருவங்கள் உள்ளன. இவை, அற்புதச் சிற்ப வேலைக்கான உதாரணம். சிற்பங்களின் அணிகலன்கள் மிக நுண்ணிய திறத்தைக் காட்டுகின்றன. முதல் நோக்கில் இரண்டும் ஒன்று போல் தோன்றும்! கூர்ந்து நோக்கினாலன்றி, அணிகலன்களுக்கிடையிலான வேறுபாட்டைக் காண்பது கடினம்.
தலப் பாடல்:
கால பாசம் பிடித்தெழ தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீல லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
பாசக்கயிற்றோடு வரும் எமதூதுவர், இவர் பாலர், இவர் கிழவர், இவர் பழையவர் என்றுசொல்லி, விட்டுப் போக மாட்டார். நிழலமர்ந்த வாட்போக்கிநாதரின் தூய்மையை மனத்தால் எண்ணியவர் எமதூதருக்கஞ்சாது எஞ்ஞான்றும் சிவநெறியில் நிற்பர் என்பது பொருள்.
இவ்வளவு உயரத்தில் எங்ஙனம் இத்தகைய ஆலயம் எழுப்புதல் சாத்தியம் என்ற கேள்வி என்னுள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தேன். வியப்பதற்கு விழிகளும், பெருமையினை உரைப்பதற்கு மொழிகளும் போதவில்லை!
Download As PDF