சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் விலை குறைப்பு இன்று (செவ்வாய்கிழமை) அமலுக்கு வந்தது. இதன்மூலம், 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகின்றனர். கண்காணிக்க மாவட்டம் தோறும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஆன்லைன் வர்த்தகம், பங்குச் சந்தை வீழ்ச்சி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இந்த விலையேற்றத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பருப்பு, பாமாயில் விற்பனை செய்யும் திட்டத்தை அரசு 2009ம் ஆண்டு முதல் செயல்படுத்தியது. அதாவது துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ரூ.40க்கும், பாமாயில் லிட்டர் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், முதல்வர் கருணாநிதி உயர் அதிகாரிகளுடன் கோட்டையில் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் விலையை குறைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ரூ.40க்கு விற்கப்படும் உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.10 குறைத்து ரூ.30க்கும், பாமாயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.30 என்பதில் இருந்து ரூ.5 குறைத்து ரூ.25க்கும் விற்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இந்த விலை குறைப்பு பிப்ரவரி 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று(செவ்வாய்கிழமை) இத்திட்டம் அமலுக்கு வந்தது. மாவட்டந்தோறும் உள்ள ரேஷன் கடைகளில் இன்று காலை முதல் இப்பொருட்கள் வழங்கப்பட்டன. கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு அறிவித்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை குறைப்பு பற்றி அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள பொருட்களை தர மறுக்கும் ரேஷன் கடைகளை கண்காணிக்கும் வகையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 1.94 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கார்டு வைத்துள்ள அனைவருக்கும் பொருட்கள் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் விற்பனை செய்வதற்காக 27 ஆயிரம் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 5 ஆயிரம் டன் பருப்பு வகைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விலை குறைப்பு மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.400 கோடி செலவு ஏற்படும். இவ்வாறு அவர்
கூறினார்.
வெளிமார்க்கெட்டில் விலை 2.5 மடங்கு அதிகம்
0 comments:
Post a Comment