சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 62 லட்சம் பேர், தங்கள் கல்வித் தகுதிகளை பதிவு செய்துவிட்டு, அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் இந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில், பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வித்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளில் அதிகளவில் புதிய பணி நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. தி.மு.க., அரசு அமைந்தபின், கடந்த நான்கரை ஆண்டுகளில் ஐந்து லட்சம் பேருக்கு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அப்படியிருந்தும், வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மள மளவென உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு வரை, வேலை வாய்ப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 55 லட்சத்திற்குள் இருந்தது. ஆனால், கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி 62 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதில், பெண்கள் எண்ணிக்கை மட்டும் 29 லட்சமாக உள்ளது. மார்ச் மாதத்திற்குப் பின், மே மாதத்தில் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள், அதன்பின் ஆசிரியர் தேர்வு முடிவுகள் என, பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பர். ஆனால், இந்த விவரங்கள் அரசின் புள்ளி விவரத்தில் சேர்க்கப்படவில்லை. மார்ச் 31ம் தேதி வரையான புள்ளி விவரங்களை மட்டும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. ஆதிதிராவிடர் பிரிவில், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டும் 12 ஆயிரத்து 449 பேர், அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். பழங்குடியினர் பிரிவில் 186 இன்ஜினியரிங் பட்டதாரிகளும் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Download As PDF
0 comments:
Post a Comment