2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஜேபிசி விசாரணை தேவை என்று கோரிய எதிர்க்கட்சிகளாலும், விசாரணைக்கு உத்தரவிட மாட்டோம் என்று பிடிவாதமாக கூறி வந்த காங்கிரஸாலும் இன்று மக்கள் வரிப்பணம் ரூ. 146 கோடி படு மோசமாக விரயமாக்கப்பட்டுள்ளது.
இந்த வரிப்பணத்தை எந்த ஒரு நல்ல காரியத்திற்காகவும் செலவிடவில்லை. மாறாக, ஒன்றுமே செய்யாமல் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது.
நவம்பர் 9ம் தேதி தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடந்த குளிர்காலக் கூட்டத் தொடரால்தான் இந்த பெரும் நஷ்டம். இந்த நாட்களில் ஒரு நாள் கூட அவைகள் செயல்பட முடியவில்லை. தினசரி கூடும், பத்து நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டு விடும். இப்படியே முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை விளையாடி வந்தனர் எதிர்க்கட்சி எம்.பிக்களும், ஆளுங்கட்சியினரும்.
இந்த எம்.பிக்களின் திருவிளையாடலுக்காக செலவான தொகைதான் ரூ. 146 கோடி. ரூ. 1.74 லட்சம் கோடி நஷ்டத்தை ராஜா ஏற்படுத்தினார் என்று கூறி அதற்கு ஜேபிசி விசாரணை கோரி எதிர்க்கட்சியினர் நடத்திய அமளி துமளிகளால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் இந்த ரூ. 146 கோடி.
எதிர்க்கட்சிகள் சபையை நடத்த விடமாட்டார்கள் என்ற நிலை தெளிவாக தெரிந்தபோதிலும், நாடாளுமன்றத்தை ஒத்திவைக்காமல், நாட்டு மக்களிடம் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படட்டும் என்ற எண்ணத்தில் வேண்டும் என்றே நாடாளுமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க முயலாமல், வேடிக்கை பார்த்து வந்த காங்கிரஸ் அரசும் கூட இந்த நஷ்டத்திற்கு பொறுப்பேற்றாக வேண்டும்.
நடப்பு நிதியாண்டில் லோக்சபாவுக்கான மொத்த பட்ஜெட் ரூ. 347 கோடியாகும். அதில், கிட்டத்தட்ட பாதிப் பணத்தை இப்படி ஒன்றுமே செய்யாமல் வீணடித்துள்ளனர் பொறுப்பற்ற நமது எம்.பிக்கள்.
இந்தப் பணத்தைக் கொண்டு நூறு கிராமங்களுக்கு ஏதாவது நல்லது செய்திருக்கலாம். ஏதாவது வறுமை ஒழிப்புத் திட்டத்திற்குப் பயன்படுத்திருக்கலாம். ஆனால் இப்படி எந்த நல்லதுக்கும் பயன்படாமல் மக்கள் வரிப்பணத்தை ஒன்றும் செய்யாமல் வீணடித்திருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மீரா குமார்-அன்சாரி வருத்தம்:
குளிர்காலக் கூட்டத் தொடர் ஒரு நாள் கூட நடைபெறாமல் இப்படி முடிந்திருப்பது குறித்து லோக்சபா சபாநாயகர் மீராகுமார், ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மீரா குமார் கூறுகையில், தனிப்பட்ட முறையில் இது எனக்கு மிகவும் சோகமான அனுபவம். எதிர்காலத்தில் இப்படி நடைபெறாது என்று நம்புகிறேன். மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை உணர்ந்து, அதற்கு மதிப்பளிக்கும் வகையில் எம்.பிக்கள் செயல்பட வேண்டும். எம்.பிக்கள் இதுபோல தொடர்ந்து செயல்பட்டால், ஜனநாயகத்தின் மீதான மக்கள் நம்பிக்கை தகர்ந்து போய் விடும் என்றார்.
அன்சாரி கூறுகையில், போராட்டம், ஆர்ப்பாட்டம், இடையூறு, அதிருப்தி ஆகியவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை எம்.பிக்கள் உணர்ந்து, தங்களைப் பற்றிய சுய ஆய்வை செய்து வருங்காலத்தில் பொறுப்புடன் நடக்க முயல வேண்டும்.
ராஜ்யசபாவில் ஆக்கப்பூர்வமான, பொதுமக்கள் நலன் குறித்த எந்த விவாதமும், வாக்குவாதமும் நடைபெறவில்லை. சிறப்பு தீர்மானங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. பூஜ்ய நேரத்தில் எந்தவிதமான விவாதமும் நடைபெறவில்லை. எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை, எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இது மிகவும் வேதனை தருகிறது என்றார்.
Download As PDF
0 comments:
Post a Comment