கன்னியாகுமரிக் கடற்கரை
கன்னியாகுமரியில் உள்ள வான்தொடும் திருவள்ளுவர் சிலையைக் காண்பது என் கனவு். நெடுநாள் கனவு நிறைவேறியது. தமிழகத்தின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்று கன்னியாகுமரி. வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடலின் சங்கமம் கன்னியாகுமரியின் சிறப்பு. சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் இங்கு காத்திருந்து காண வேண்டியவை. சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்களால் ஆளப்பட்ட பகுதி.
உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவரின் சிலை 133 அடி உயரம். 7000 டன் எடை. செப்டம்பர் 1990 ல் கட்ட ஆரம்பித்து ,இடையில் சில வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இறுதியாக ஜனவரி 1, 2000 ல் கட்டி முடிக்கப்பட்டது. விவேகானந்தர் பாறைக்கருகில் நிறுவப்பட்டது. அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி மற்றும் சங்கராபுரம் ஆகிய பகுதிகளின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. ஏறத்தாழ 150 சிற்பக்கலைஞர்களின் பங்களிப்பால் உருவானது. காண வேண்டிய அதிசயங்களில் ஒன்று!
கடற்கரைக்கு காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் அழகு சேர்ப்பவை. தவிர பகவதி அம்மன் ஆலயம், விவேகானந்தர் சிலை, சுனாமி நினைவுச்சின்னம் போன்ற பல குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தன்னகத்தே கொண்டது கன்னியாகுமரிக் கடற்கரை. அன்றைய தினங்களில் முத்து வணிகத்திற்குப் பெயர் பெற்ற கடற்கரை. யாவரும் காணவும்!