புதுடெல்லி : தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதை தடுத்து நிறுத்தாவிட்டால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும் என்று இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இலங்கை கடற்படையால் 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இப்பிரச்னையில் தலையிட்டு, இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவ், கொழும்பு சென்று இலங்கை அதிபர் ராஜபக்சேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு விவரம் பற்றி டெல்லியில் முதல்வர் கருணாநிதியிடம் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, செயலாளர் நிருபமா ராவ் ஆகியோர் நேற்று விளக்கினர். சந்திப்பின் போது, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் உடனிருந்தார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குவதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணாவிடம் கருணாநிதி வலியுறுத்தினார்.
பின்னர், நிருபர்களிடம் கிருஷ்ணா கூறியதாவது: இந்திய மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மீனவர்களை கொல்வது எக்காலத்திலும் ஏற்கப்படாதது. இப்பிரச்னையில் இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படும். பாகிஸ்தான் உள்பட எந்த நாடுமே எல்லை தாண்டும் மீனவர்களை தாக்குவதில்லை என்பதை இலங்கையிடம் சுட்டிக் காட்டி யுள்ளோம். இந்தியாவின் கவலையை ராஜபக்சேயிடம் உணர்த்தியுள்ளோம். மீனவர் கொல்லப் பட்ட சம்பவம் பற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.
மீனவர்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் மீன்பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக இருநாடுகளும் இணைந்து அறிக்கை விடுத்துள்ளன. மேலும், இருநாட்டு கூட்டுக் குழுவின் கூட்டத்தை இம்மாதம் 15ம் தேதியையொட்டி நடத்தி, இப்பிரச்னை குறித்து விவாதிக்குமாறு வெளியுறவு துறை செயலாளர் நிருபமா ராவுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கிருஷ்ணா தெரிவித்தார்.
http://boobalan-s.blogspot.com/
Download As PDF
0 comments:
Post a Comment