மலையக இளைஞர், யுவதிகள் ஏராளமானோர் கல்வி கற்க வசதியின்மையினாலும் குடும்ப பொருளாதார தேவைகளுக்காகவும் இளம் வயதிலேயே கொழும்பிற்கு வந்து ஆடைத் தொழிற்சாலைகளிலும், ஹோட்டல்களிலும், நடைப்பாதை கடைகளிலும் வேலை செய்கின்றார்கள்.
பெண்களை பொறுத்த அளவில் பெரும்பாலானோர் ஆடைத் தொழிற்சாலைகளிலேயே வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
ஆனால் இவர்கள் பல சிரமங்களை மேற்கொண்டே இங்கு தொழில் புரிகின்றனர். காலை 8.30 மணிக்கு வேலைக்குச் சென்றால் மாலை 5.30 அல்லது 6 மணிவரை வேலை செய்யவேண்டி உள்ளது. சில தொழிற்சாலைகளில் கட்டாயத்தின் பேரில் இரவு 8, 9 மணிவரை வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
சில ஆடைத் தொழிற்சாலைகளில் மேல் அதிகாரிகளினாலும் உடன் பணிப்புரியும் ஆண்களாலும் பாலியல் துஷ்பியோகங்களுக்கும் சில பெண்கள் ஆளாகுகின்றனர்.
அதே போல் 14 வயதிற்கு கீழ்பட்ட பிள்ளைகளை வேலைக்கு அமர்த்த கூடாது என்பது சட்டம். இன்று அந்த சட்டத்தை மீறி பல ஹோட்டல்களில் மேசை துப்பரவு செய்வது முதல் எடுபிடி வேலைகளுக்கு ஆண்பிள்ளைகள் இருப்பார்கள்.
நடை பாதைக்கடைகளில் அதிகளவில் ஆண்பிள்ளைகள் வேலை செய்கின்றனர். இதற்கு காரணம் வறுமை. இந்த வறுமையில் அவர்கள் படும் கஷ்டங்களை விவரிக்கின்றார்கள்…
முதலாவதாக பெண்ணொருவர் தனது துன்பங்களை விவரிக்கிறார்,
என்னுடைய பெயர் மலர் கந்தசாமி. வயது 37 ,என்னுடைய சொந்த ஊர் கலஹா. நான் திருமணம் முடித்தவள் எனக்கு 2பிள்ளைகள் இருக்கிறார்கள். என்னுடைய கணவர் யாழ்ப்பாணம் இளவாலையைச் சேர்ந்தவர். நாங்கள் விரும்பி தான் திருமணம் செய்தோம். சந்தோசமாக தான் வாழ்ந்தோம். அவர் இப்ப உயிருடன் இல்லை.
அதனால் தான் எனக்கு அந்த நிலை. நான் கல்விப் பொது தராதர சாதாரண தரம் வரை தான் படித்தேன். முன்னர் நான் கொழும்பில் உள்ள தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் போது தான் அவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்தோம்.
அவருடைய சொந்த தொலைத்தொடர்பு நிலையம் தான் அது. 5 வருடங்களுக்கு முன்னர் அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இடையில் பண தகராறு வந்ததில் அவரை கொலை செய்து விட்டார்கள். வழக்கு விசாரணை நடந்தும் எந்த நியாயமும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
என்னுடைய பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் வளர்க்க வேண்டும் என்பதற்காக நான் வேலைக்கு செல்கிறேன். கொழும்பு 13இல் இயங்கும் பிரபல்யமான ஆடைத் தொழிற்சாலையே இது. காலை 8.30 மணிக்கு வேலையில் நிற்க வேண்டும்.
மாலை 6.30 சிலவேளை 9மணி கூட செல்லும். சம்பளம் மிகக் குறைவு.. 7,500 ரூபாய் தான். மேலதிக நேரத்திற்கு அதற்கான சம்பளம் தருவார்கள். நான் தையல் பகுதியில் இல்லை. என்னுடைய வேலை தைத்து வரும் உடைகளை நேர்த்தியாக அயன் செய்து பொதி பண்ணுவது தான் என் வேலை.
என்னோடு அந்த பகுதியில் மொத்தம் 28 பேர் இருக்கின்றார்கள். தைப்பவர்களுக்கு சம்பளம் கொஞ்சம் அதிகம். லீவு வாரத்தில் ஒரு நாள் தான் ஞாயிறு மட்டும் தான். ஊருக்கு போவது என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே சொல்ல வேண்டும். அவசரம் என்றால் விடுவார்கள்.
ஆனால் கொஞ்சம் கஷ்டம் தான். மற்ற படி துஷ்பிரயோகங்கள் என்றால் இல்லாமல் இல்லை. சில சின்ன வயது பிள்ளைகள் வேலையில் ஒழுங்கில்லா விட்டால் அடிப்பார்கள். தேவையில்லாத வார்த்தைகளால் ஏசுவார்கள்.. இல்லாமல் இல்லை. இது கூட எங்களுக்கு மேல் வேலை செய்யும் கண்காணிப்பாளர்களால் தான் நடக்கும்.
அடுத்ததாக ஒரு சிறுவனின் குரல்,
எனது பெயர் ராஜா வயது 17. நான் ஹட்டனை சேர்ந்தவன். என்னுடைய அம்மா, அப்பா இருவரும் தோட்டத்தில் தான் வேலை செய்கிறார்கள். நான் என் மாமாவுடன் வேலை செய்ய கொழும்பிற்கு வந்தேன்.
இப்ப ஒரு வருடமாக நான் மாமாவுடன் தான் வேலை செய்கிறேன். நடைபாதை கடை என்பதால் மழை காலங்களில் எங்களுக்கு தொழில் செய்வது கஷ்டம் தான். வெய்யில் நேரம் எவ்வளவும் சத்தம் போட்டு சனங்களிடம் பொருட்களை விற்கலாம்.
மழை காலத்தில் எங்களுக்கு நிற்பதே கஷ்டம். அப்போது எங்களுக்கு வருமானம் இல்லை. சம்பளம் என்று இல்லை. ஊருக்கு போகும் நேரத்தில் மாமா ரூபா 5000 அல்லது 10000 என்று தருவார். வேறு நல்லவேலை தேடுகிற அளவிற்கு நான் படிக்க வில்லை.
0 comments:
Post a Comment