விளம்பரங்கள், விளம்பரங்கள் – நாம் இவற்றை விரும்புகிறோமோ இல்லையோ, அவை நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டன. சாலையில் செல்லும்போதும், டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போதும், மொபைல் போனிலும், தொலைபேசி யிலும், இணைய உலா செல்கையிலும் இவை நம் கவனத்தைத் திருப்பி நம்மை காய்ச்சுகின்றன. பல நேரம் இவற்றை நாம் விரும்புவதில்லை. வேண்டாத விளம்பரங்கள் எதற்காக நம் முன்னே வருகின்றன என்று எரிச்சல் அடைகிறோம். இதில் இணையத்தில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத விளம்பரங்கள் வேறு காட்டப்படுகின்றன.
இணையத்தில் இந்த விளம்பரங்கள் வருவதனைத் தடை செய்திடும் வழிகளை பிரவுசர்கள் தருகின்றன. இங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பராவில் இந்த தடையை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். இவை தவிர இலவச தடை செய்திடும் புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைத் தடை செய்திடும் முன், இவை எந்த எந்த வடிவங்களில் கிடைக்கின்றன என்று பார்க்கலாம். முதலாவதாக பாப் அப் வகை.இவை புதிய ஒரு விண்டோவில், நாம் பார்க்கும் இணைய தளங்களுக்கு மேலாக தோன்றுகின்றன. எதிர்பார்க்காத நேரத்தில் வந்து, மறையாமல் அடம் பிடிக்கும் இவற்றை அனைவருமே விரும்புவதில்லை. அடுத்த வகை சிறிய படங்களாக, தளங்களில் ஊடுறுவும் கட்டங்கள்.
இவற்றில் பெரும்பாலானவை நாம் அலட்சியப்படுத்திவிடும் வகையிலேயே இருக்கும். அடுத்த வகை பிளாஷ் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வருபவை. இவை இணைய தளங்களில் அனிமேஷன்களாக நுழைபவை. இவற்று டன் புதியதாக ஒரு வகை இப்போது அதிகம் வருகின்றன. நம் கர்சர்களைக் குறிப்பிட்ட சொற்கள் அருகே கொண்டு செல்கையில் இந்த விளம்பரங்கள் தோன்றுகின்றன. இவை ஜாவா ஸ்கிரிப்ட் என்னும் ஆன்லைன் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. அதிக எரிச்சலைக் கொடுப்பவை இவைதான். இந்த விளம்பரக் கட்டங்களில் வலது மேல் மூலையில், இவற்றை மூடுவதற்கான அடையாளம் தரப்பட்டிருந்தாலும், அதனைக் கிளிக் செய்தாலும் மீண்டும் மீண்டும் வருகின்றன.
இணையப் பக்கத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இவை தோன்றும். குறிப்பாக நாம் படிக்க விரும்பும் டெக்ஸ்ட்டக் இவை மறைப்பதால், நமக்கு பெரும் தடையாக இவை உள்ளன. இவற்றைத் தடுக்க நாம் நம் பிரவுசர்களைத் தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டவையாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், டூல்ஸ் சென்று பாப் அப் பிளாக்கர் என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் Turn on Pop up Blocker என்பது தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தால், அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இதில் கிடைக்கும் Filter Level மெனுவில், தடை எந்த அளவில் அமைக்க என்று ஆப்ஷன் கேட்கப்படும். இதில் மாறா நிலையில் Medium என இருக்கும். இதனை High என அமைக்கவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கான ஆட் ஆன் தொகுப்பு ஒன்று பாப் அப் விளம்பரங்களைத் தடை செய்வதற்காகவே கிடைக்கிறது.
அதனை இன்ஸ்டால் செய்தும் பயன் படுத்தலாம். இதே போல பயர்பாக்ஸ் பிரவுசரிலும் பாப் அப் பிளாக்கர் வசதி தரப்பட்டுள்ளது. முதலில் Tools, Options, Content எனச் செல்லவும். இங்கு ஒரு டிக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Block Pop Up Windows என்று ஒரு வரி, முன்னதாக பாக்ஸ் கொண்டிருக்கும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் தரப்பட்டுள்ளது போல மீடியம், ஹை என்ற அளவு தரப்பட்டிருக்காது. பிளாஷ் முதல் பெரும்பாலான பாப் அப் விண்டோக்களைத் தடுக்க, http://www.noscript.net/getit என்ற தளத்தில் கிடைக்கும் நோ ஸ்க்ரிப்ட் என்ற ஆட் ஆன் தொகுப்பினைப் பயன்படுத்தலாம்.
இது அனைத்தையும் தடுக்கும் என்பதால், நாம் விரும்பாத தடைகள் ஏற்படுத்தப்படலாம். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், ஏதேனும் நீங்கள் பார்க்க விரும்பும் இணையப் பக்கம் சரியாக லோட் ஆகவில்லை என்றால், பயர்பாக்ஸ் பிரவுசரின் வலது கீழ் புறத்தில், S! என்பதில் கிளிக் செய்து பிரச்னைக்குத் தீர்வு காணவும். இதில் என்ன பிரச்னை என்றால், சாதாரண இமேஜ் கொண்ட பாப் அப் விளம்பரங்களை இது தடுப்பதில்லை. அவற்றை நாமே நீக்கிவிடலாம். இருப்பினும் அதனையும் தடுக்க வேண்டும் என விரும்பினால், ஆட் பிளாக் ப்ளஸ் (Ad Block Plus) என்ற ஆட் ஆன் தொகுப்பினை, டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.
இது www.snipurl.com/eylg2 என்ற தளத்தில் கிடைக்கிறது. இது ஏறத்தாழ 99% விளம்பரங்களைத் தடுப்பதாக, இதனை இயக்கிப் பார்த்து ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர். ஆப்பரா பிரவுசரில் ஓர் எளிமையான விளம்பரத் தடுப்பு வசதி தரப்பட்டுள்ளது. மிகவும் சிறப்பாக இது செயல்படுகிறது. முதலில் கூறப்பட்டுள்ள இரண்டு பிரவுசர்களிலும், உங்கள் நோக்கம் நிறைவேறவில்லை என்றால், இதற்காகவே இந்த பிரவுசரைப் பயன்படுத்தலாம். மேலே கூறிய வழிகளின்படி, விளம்பரங்களைப் பெரும்பாலும் தடுத்துவிடலாம். ஆனால் முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமே. இணையத்தில் நிறைய விஷயங்கள் இலவசமாகத் தரப்படுகின்றன. எனவே தளங்களை உருவாக்கி, தகவல்களையும் வசதிகளையும் நமக்குத் தருபவர்கள், இத்தகைய விளம்பரங்கள் மற்றும் நன்கொடைகள் மூலமே இவற்றை இயக்கி வருகின்றனர்.
எனவே இவற்றை ஓரளவிற்கு நாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது. டிவியில் காட்டப்படும் சினிமா, சீரியல் நாடகங்களில் எத்தனை விளம்பரங்கள் வந்து நம்மைச் சோதிக்கின்றன. பொறுமையாகத்தானே இருக்கிறோம். விளம்பரங்கள் வரும்போது அடுத்த சேனலுக்கு மாறினாலும், அங்கும் இந்த விளம்பரங்கள் வரத்தானே செய்கின்றன. தீங்கு இல்லாத விளம்பரங்களைக் கவனிப்போம். பல வேளைகளில் அவை நமக்கு உதவுபவையாகவும் இருக்கலாம்.
Download As PDF
0 comments:
Post a Comment