முதல் கோணல்
தமிழ்நாட்டில் அனேகமாக எல்லோருக்கும் இம்மாதிரியான அனுபவம் வாய்த்திருக்கும்.பதிவெழுத ஆரம்பித்த பின்னர் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களில் முதலாவது உங்கள் கவனத்துக்கு!
1. சென்னை - கும்பகோணம்:
சென்னையிலிருந்து கும்பகோணத்திற்குப் பேருந்துப் பயணம். எப்போதுமில்லாதபடி முன்பதிவு செய்து! இரவு 10:30க்குப் புறப்படும் என்றதால்,கோயம்பேடுக்கு 10:20க்கு வந்து காத்துக் கொண்டிருந்தோம். பேருந்து வரவில்லை. மற்ற நடத்துனர்களைக் கேட்டதற்கு, 11:00 மணிக்குள் வரலாம் (!) என்றனர். தாமதத்திற்கான காரணம் கேட்டபோது, தங்கள் துறைக்கு மட்டும் புரியக் கூடிய விளககம் தந்தனர்.
ஒருவழியாகப் பேருந்து 11:05 க்கெல்லாம் வந்து சேர்ந்தது. பேருந்தைப் பார்த்து நாங்கள் அடைந்த அதிர்ச்சி, சந்திரமுகியில் வடிவேல் அரண்மனைக்குள் சென்று அடையும் அதிர்ச்சிக்கு ஒப்பானது. படங்களைப் பார்க்கவும்! பேருந்து எண்ணை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, ஏறாமல் தப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அடுத்தடுத்த சோதனைகள் காத்துக் கொண்டிருந்தன. எங்களது ஜன்னலை மட்டும் மூட முடியவில்லை. எங்கள் இருக்கை, கிட்டத்தட்ட இரும்பால் மட்டுமே ஆனது. நடத்துனரிடம் புகார் செய்தபோது, அவர் அரசாங்க அதிகாரிகளுக்கே உரிய தப்பிப்பு பதில் தந்தார். “பேருந்து குறித்த புகார்களையெல்லாம் தி.நகர் அலுவலகத்தில்தான் தரவேண்டும்” என்றார்.
உலக ஓசைகளில் பெரும்பாலானவற்றைப் பேருந்து ஓடும்போது கேட்க முடிந்தது. சென்றடையப் போவதில்லை என்றே தீர்க்கமாக நம்பினேன். நல்லவேளையாக நம்பிக்கை பொய்த்தது.
போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் கேட்க விரும்புவது:
முதல் உலகப் போருக்கு முந்தைய வாகனங்களை மாற்றும் எண்ணம் உண்டா? அல்லது இவை பேருந்துதான் என்று ஏமாற்றும் எண்ணம்தானா?
Download As PDF