ஸ்ரீரங்கம்!
திருச்சி மாநகரத்தின் கம்பீரமான அடையாளம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். 1000 வருடங்களுக்கு மேல் பழமையானது. 156 ஏக்கர் பரப்பளவு! இந்தியாவின் உயர்ந்த ராஜகோபுரத்தைக் கொண்டது. (திருச்சிக்குள் நுழையும்போது எந்தத் திசையிலிருந்தும் பார்க்கமுடியும்!) கம்பராமாயணம் அரங்கேறிய ஆலயம்.
7 சுற்றுப் பிரகாரங்கள், 21 கோபுரங்கள் கொண்டது. 14 முதல் 17 ஆம் நூற்றாண்டுக்குள் கட்டப்பட்டதாகக் கருதுகிறார்கள். சேரர், சோழர், பாண்டியர், ஹோய்சாளர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் போன்ற முக்கியமான அரச வம்சங்கள் படிப்படியாகக் கட்டிய ஆலயம்.
ரங்கநாதர் சிலை சுயம்புவாகத் தோன்றியது என்கிறார்கள். அவர் உறங்கவில்லை; ஆழ்ந்த யோகநிலையில் இருக்கிறார். அனைவரையும் புன்னகையோடு கவனிக்கிறார். இவை ரங்கநாதர் குறித்த பக்தர்களின் கருத்து! கருத்தையும், கண்ணையும் கவரும் சிற்பங்கள் ஏராளம். நின்று நிதானமாகப் பார்வையிட வேண்டியவை!
என்னைக் கவர்ந்தது இராமானுஜர் சன்னதி. இராமானுஜர், பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வைணவ ஞானி. அனைத்து மதத்தினரும் இறைவனின் தொண்டர்களே என்ற கொள்கையை மேற்கொண்டு வாழ்ந்து காட்டியவர்.
முக்தி அடைவதற்கான வழியைக் கண்டறிய விழைகிறார். பல மாதங்களானாலும் அவரது குரு கற்றுத்தரவில்லை. இவரும் பொறுமை இழக்காமல் தொடர்ந்து முயற்சிக்கிறார். குரு, இவரது விடாமுயற்சியை மெச்சி உபதேசிக்கிறார். உபதேசம் முடிந்ததும் குரு சொல்கிறார்: “இந்த மந்திரத்தைக் கேட்பவர்கள் அனைவரும் முக்தி அடைவது உறுதி. ஆனால், கற்றுக் கொடுத்தால் நீ தலை வெடித்து இறந்து போவாய்!”
இராமானுஜர், சற்றும் தயங்காமல், தாமதிக்காமல் திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தின் மேலேறி ஊருக்கே கேட்கும்படி சத்தமாக மந்திரத்தைக் கூறுகிறார். குரு தனது வார்த்தையை மீறியதாக வருந்தும்போது இராமானுஜர் சொல்கிறார்: “ நான் தலைவெடித்து இறந்தாலும் பரவாயில்லை. கேட்கும் அனைவருக்கும் முக்தி கிடைத்தாலே போதும்!” பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஜாதி பாராட்டாத வைணவப் பெரியவர் இராமானுஜர். 120 ஆண்டுகள் வாழ்ந்தவர் என்கிறார்கள்.
ஆலயத்தின் சிறப்புகளை முழுமையாய்ச் சொல்ல எனது தமிழ் போதாது. காவியக் கவிஞர் வாலியின் உதவி தேவைப்படும். ஆலய் அநிர்வாகம் அனுமதித்த எல்லைக்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படங்கள் எடுத்து உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். சிறப்புகளைப் படங்களின் மூலமும் அறியலாம்.
சில வருத்தங்களும் இருக்கின்றன. குறிப்பாக ஆலயத்துக்குள் பக்தர்கள் பார்க்குமிடமெல்லாம் நெய்விளக்கு ஏற்றுகிறார்கள். ஆலயச் சுவர்களைப் புகை தழுவிக் கறுப்பாக்குகிறது. கருங்கல் தரையில் எண்ணைய் படிகிறது. மழைக்காலங்களில் நடப்பவர்கள் பார்த்து நடக்கவும்!
ராஜகோபுரத்தில் விரிசல். கோபுரத்தைச் சுற்றி 40 மீட்டர் பரப்பளவுக்குக் கடைகளைக் காலிசெய்யப்போகிறார்கள். எப்போதோ செய்திருக்க வேண்டியது. பல நூற்றாண்டுக் கலைச்சின்னங்களையும் பணமாய்ப் பார்க்கும் பழக்கத்தைக் கைவிடுவது அனைவருக்கும் நல்லது! மற்றபடி மறக்கமுடியாத அனுபவம்!
தெரிந்தோ, தெரியாமலோ என் வலைப்பூவில் நிறைய ஆலயங்களின் படங்கள். நான் பக்திப்பழம் என்று தவறாகக் கருதுபவர்களுக்காக இந்த டிஸ்கி! என்னளவில் ஆலயங்கள், ஆச்சரியங்கள். பழைய தமிழரின் கலைச்சான்றுகள். நாம் கர்வப்படக் காரணமான கட்டிட அற்புதங்கள். எனவே, நான் எந்த மதத்தையும் வணங்கவுமில்லை; பரிந்துரைக்கவுமில்லை நண்பர்களே! எனது ஆச்சரியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்! புகைப்படங்களை எனது ஜாதிச் சான்றிதழாகக் கருதவேண்டாம்!
அடுத்த முக்கியமான செய்தி! இது எனது 400 ஆவது இடுகை! விளையாட்டாகத் தொடங்கிய விஷயம் இன்று நானூறை எட்டியிருக்கிறது. பதிவர்கள், திரட்டிகள், வாசகர்கள், வலைப்பூவைப் பின் தொடர்பவர்கள், Google, NHM Writer, நண்பர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சி தழுவிய நன்றிகள். நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை! இல்லை!
Download As PDF
0 comments:
Post a Comment